Monday 12 February 2018

சிகரெட் பிடிப்பதை நிறுத்த தலைகவசம் அணிந்த மனிதர்


புகைப்பழக்கம் உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை சிகரெட் பெட்டிகளிலேயே அச்சிட்டிருந்தாலும், எவ்வளவு விழிப்புணர்வு விளம்பரங்கள் தொலைக்காட்சியிலும், இணையத்திலும் வெளியிடப்பட்டாலும், புகைக்க பழகி விட்டவர்கள் அந்த பழக்கத்தை அவ்வளவு எளிதில் விட்டு விட முடிவதில்லை, அவர்களே அந்த பழக்கத்தை நிறுத்தி விட நினைத்தாலும் நிறுத்த முடியாத அளவுக்கு புகைப்பழக்கம் அவர்களை அடிமைபடுத்தி வைத்திருக்கிறது. 




துருக்கி நாட்டை சேர்ந்த 42 வயதாகும் இப்ராகிம் யூஸல் கடந்த 25 வருடங்களாக தினமும் இரண்டு பாக்கெட் சிகரெட் புகைப்பதை வழக்கமாக கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார், சமீபத்தில் அவரது தந்தை புகைபழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய் வந்து இறந்து போனவுடன் இப்ராகிம் யூஸலுக்கு சிகரெட் புகைக்கும் பழக்கத்தை நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது, ஆனால் எவ்வளவோ முயற்சித்தும் புகைக்கும் பழக்கத்தில் இருந்து அவரால் விடுபட முடியவில்லை, ஒவ்வொரு வருடமும் தன் மூன்று பிள்ளைகளின் பிறந்த நாளில் சிகரெட் புகைப்பதை விட்டு விட உறுதிமொழி எடுப்பார் ஆனால் அடுத்த நாள் முடிவதற்குள் அந்த உறுதிமொழி காற்றில் புகையாகி மறைந்து விடும், இறுதியாக சிகரெட் புகைக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட இப்ராகிம் தேர்ந்தெடுத்த வழி தான் இந்த செம்பு கம்பிகளால் செய்யபட்ட தலைகவசம். 



பார்ப்பதற்கு டேபிள் ஃபேனின் விசிறிகளை மூடியிருக்கும் கவசத்தை போல் செம்பு கம்பிகளை இணைத்து மெல்லிய இடைவெளிகளுடன் காணப்படுகிறது அந்த தலைகவசம், காற்றை சுவாசிக்கவும், மெல்லிய ஸ்ட்ரா கொண்டு தண்ணீர் குடிக்கவும் முடியும், உணவு உண்ணும் வேளை வந்தால் மட்டும் அந்த கவசத்தின் சாவியை பொறுப்பாக வைத்திருக்கும் மனைவி வந்து கவசத்தை சாவி கொண்டு திறந்து விட வேண்டும். இப்ராகிம் யூஸல் புகைபழக்கத்தை நிறுத்த இந்த செம்பினால் செய்யப்பட்ட தலைகவசத்தை காலையில் எழுந்தவுடன் அணிந்து கொண்டு பூட்டி சாவியை மனைவியின் கையில் கொடுத்து விடுகிறார். சாப்பாட்டு நேரம் வந்தவுடன் அவரது மனைவி  இப்ராகிமின் தலைகவசத்தை திறந்து விட்டால் தான் இப்ராகிம் உணவருந்த முடியும். 


  
முதலில் இந்த வினோதமான திட்டத்தை இப்ராகிமின் மனைவி ஏற்க மிகவும் தயங்கி இருக்கிறார், ஆனால் கணவர் மிகவும் தீவிரமாக புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட தீர்மானித்து செயல்படுவதை பார்த்து அவர் தன் கணவருக்கு உதவ தொடங்கி விட்டார், இன்னும் சில நாட்களில் இப்ராகிம் புகைபழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட்டு விடுவார் என்று நம்பலாம். 


-------------------------------------
--------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்